01
ஆயிரம் கண்ணறைகள் கொண்ட
அப்பெரும் தேசம்தனில் திடீரென
நுழைந்திட்ட இரு கருவிழிகள்
என் விழிகளை அவள் வழிதனில் செருகவைத்தன.
அடியேன் கால்கள் அவள் கருங்கூந்தல்
வாசம்தனை நுகர்ந்தே நகர்ந்து சிற்றுண்டிச்சாலைதனில் ஓய்ந்தது.
அங்கோ திருவிழாக் கோலம் பூத்திருந்தாற் போல் ஈர் ஐம்பது சிரங்களிடையே தனித்துவமாய் அவள்.
பல நேர போராடலின் பின்னே அவளது உதடருகே ஒட்டிக்கொண்ட பருக்கை கூட தட்டிவிடாமல்
ஒரு பதின்ம வினாடி பார்வைகள் ஒட்டிக்கொண்டன
எந்த வித பெயரும் இல்லா ஓர் உறவாய்…
#அவள்
02
ஓராயிரம் தடவைகள் சென்ற
பாரும் புதிதாய் தோன்றும் – அவள்
பாத தரிசனம் கிட்டையில்…
கனவுகள் நூறு கொண்டு
அப்பியாச கொப்பிகள் சுமந்து
கூரைகள் நாடும் கூட்டத்தில்
கன்னியவள் வதனம் காண
காத்திருக்கும் வாலிபன் அவன்…
முச்சந்தி வளைவிலே
ஒன்றரையடி வேலியது
ஏறி அமர அமைந்தருளியது
அவளைக் காண….
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
கன்னியவள் வருகை கண்டு
கலவரம் இல்லாத போர் ஒன்று
கரை காண்கிறது இவனுள்…
கண்ணகி அவள் கன்னம் தொட்ட
கார்குழல் ஒதுக்கி கடைக்கண் பார்வையால்
கயவன் ஆக்கி சென்றாள் – இப்
பச்சிளம் பாலகனை……
மனம் களவு கொண்ட கயவனாய்
கம்பி வேலியில் இவன்,
அவள் மேல் கொண்ட
உறவின் பெயர் அறியாமல்..
#அவள்
03
நான்கரை மணிநேர வகுப்பறையின்
ஓர் ஈர் தடவை கடைக்கண் பார்வைகளும்
தோற்று போகுமடா அவளது வாகனக் கரை
கண்ணாடியில் ஓர் கள்ள பார்வை
வீசி செல்லையில்….
எம்மன்னனும் மண்கவ்வும் நிலை
வரலாம் அப்பெண்ணழகினில்,
மதிய போசனத்திற்கு அன்னதான
வரிசையில் முண்டியிடும்
இப்பாலகன் எம்மட்டு…
கனவுகள் நனவுகளான பூரிப்பில்
புது நாட்கள் புரண்டடோட
வரும் நாட்கள் வில்லங்கமாய்
அமையும் என்று அறியாமல்
இவன்…..
#அவள்
04
மறைத்திட ரகசியங்களும் இருக்கவில்லை
உரைத்திட புதினங்களும் இருக்கவில்லை.
தினமும் பதின்ம நேர உரையாடல்களுடனும்
குறுஞ்செய்திகளுடனும் கதிரவனை
வரவேற்று வழியனுப்பிய காலம்…
.
காதலின் பரவச கோலம் அது – ஆழம் புலப்படாமல் காதல் வலையில் சிக்கவைத்தது
பொறுப்புகள் இல்லை, மறுப்புகள் இல்லை.
சிறு சிறு ஊடல்களும் அரவணைப்புகளும்
அரங்கேறி ஓய்ந்தன…
.
எப்பரும் மலையும் சாயும் – அண்டத்தில்
ஓர் சிறு தீப்பொறியுடன் வெடிகுண்டு கண்டால்
அதே போல்தான் உயர்தர மாணவர்களும்
மார்கழி குண்டு கண்ட நேரம் அது…
.
உளத் தட்டுக்கள் ஆடி அமர்ந்ததுதான் தாமதம்
சிறுகச் சிறுகச் செதுக்கிய சுவர்களுடையே
ஊடுருவும் கொடிகள் போல் பயங்கள் பற்ற
இடைவெளிகளும் பாதைகளும் மாறி
செய்வதறியாது திகைத்து நின்றது மனங்கள்…..
.
#அவள்
05
கனவுகள் கொண்டு
கட்டிய கோட்டைகள்
கண்ணிமைக்கும் பொழுதில்
சிதறுண்டு போக…
.
கனவுகள் தேடியே
கால ஓட்டத்தில்
காதலை மறந்து
அவளும் போக…
.
படலை வாயில் தன்னில்
சாம்பல் உடையிலே
கயலது உணவினை
கரங்களில் ஏந்தி நின்ற
தன்னவளது இறுதி
நொடிகளின் நினைவுகளை
சுமந்து அவன்…
.
கசப்புகள் ஏதும் இன்றி
காரணங்களும் இன்றி
காற்றுடன் கலந்த காதல் அது,
புரிதலுடன் பிரிதலும்
உண்மைக் காதல் என்று
எடுத்தியம்ப மார் நிமிர்த்தி நின்றது…
#அவள்
Penned by:-
Rtr. Sarangan Ravindran
Member Editorial Committee 22-23


Leave a comment